பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் நீண்டகால தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் சாதனையை இன்று (ஜூன் 10) முறியடிக்கும் நிலையில் உள்ளார். இதனை முன்னிட்டு மாலை டெல்லி பாரத் மண்டபத்தில் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அன்றிலிருந்து தொடர்ந்து பிரதமராக செயல்பட்டு வரும் அவர், 2025-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தொடர்ச்சியான பிரதமர் பதவிக்கால சாதனையை முறியடித்தார்.
இந்திரா காந்தி, 1966-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி வரை 4,077 நாட்கள் பிரதமராக பணியாற்றினார். அதேபோல், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, 1952-ம் ஆண்டு மே 13-ம் தேதி முதல் தொடர்ந்து 4,398 நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவி வகித்தார்.
தற்போது அந்த சாதனையை பிரதமர் மோடி எட்டியுள்ள நிலையில், டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், மூத்த தலைவர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
