முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவது மட்டுமே நிரந்தர தீர்வு என கேரள நீர்வளத்துறை அமைச்சர் மோன்ஸ் ஜோசப் தெரிவித்துள்ள கருத்து தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் தக்க பதிலடி அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை பலப்படுத்திய பின்னர் முழுக் கொள்ளளவான 152 அடியாக உயர்த்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு மே 7-ம் தேதி தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து, 136 அடியாக இருந்த நீர்மட்டம் அதே ஆண்டிலேயே 142 அடியாக உயர்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், 152 அடியாக உயர்த்துவதற்குத் தேவையான பேபி அணை பலப்படுத்தும் பணிகளுக்கு கேரளாவில் ஆட்சியில் இருந்த இடதுசாரி கூட்டணி பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், அணை உடையும் அபாயம் இருப்பதாகக் காட்டும் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் குறும்படங்கள் வெளியிடப்பட்டு, கேரள மக்களிடையே அச்ச உணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதேபோல், ‘சேவ் கேரளா பிரிகேட்’ அமைப்பைச் சேர்ந்த ரசூல் ஜோய் உள்ளிட்ட பலர் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கேரள நீர்வளத்துறை அமைச்சர் மோன்ஸ் ஜோசப், கேரள மக்களின் பாதுகாப்பிற்காக முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்றும், இதற்காக உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுக உள்ளதாகவும் தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பல்வேறு நிபுணர் குழுக்களின் ஆய்வுகளுக்குப் பிறகே உச்ச நீதிமன்றம் 2014-ல் தீர்ப்பு வழங்கியதாக சுட்டிக்காட்டினர். அதன்பின்னர் தமிழக நீர்வளத்துறையினர் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், மத்திய கண்காணிப்பு குழு மற்றும் துணைக் கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட ஆய்வுகளிலும் அணை பாதுகாப்பாக இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய விவசாயிகள், இந்த விவகாரம் கேரளாவில் அரசியல் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.
2011-ம் ஆண்டைப் போல பெரிய அளவிலான போராட்டங்கள் மீண்டும் வெடிக்கும் சூழல் உருவாகும் முன், கேரள அமைச்சரின் கருத்துக்கு தமிழக முதல்வர் விஜய் தக்க பதில் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
