பாஸ்டன்: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘ஐ’ பிரிவு லீக் போட்டியில், எர்லிங் ஹாலண்டின் அபார ஆட்டத்தால் நார்வே அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஈராகை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியது.
உலகக்கோப்பை அரங்கில் முதல் முறையாக களமிறங்கிய நார்வே அணிக்காக, நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் 29-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஈராக் அணி, 39-வது நிமிடத்தில் அய்மென் ஹுசைன் அடித்த கோலின் மூலம் 1-1 என சமநிலையை எட்டியது. இதனால் போட்டி விறுவிறுப்பாக மாறியது.
ஆனால் அந்த சமநிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 43-வது நிமிடத்தில் ஈராக் கோல்கீப்பரின் தவறை பயன்படுத்திக் கொண்ட ஹாலண்ட், தனது இரண்டாவது கோலை அடித்து நார்வேயை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வந்தார். இதனால் முதல் பாதி முடிவில் நார்வே 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியிலும் நார்வே ஆதிக்கம் செலுத்தியது. 76-வது நிமிடத்தில் லியோ ஒஸ்டிகார்ட் மூன்றாவது கோலை பதிவு செய்தார். தொடர்ந்து கூடுதல் நேரத்தின் (90+5) போது ஈராக் வீரர் அய்மென் ஹுசைன் தவறுதலாக ‘சேம் சைடு கோல்’ அடித்ததால் நார்வேக்கு மேலும் ஒரு கோல் கிடைத்தது.
இதன் மூலம் நார்வே அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஈராகை வீழ்த்தி உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இரட்டை கோல் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஹாலண்டுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்
