நியூயார்க்: வளைகுடா நாடுகள் மீது ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிய சிறப்பு தீர்மானம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக, யுஏஇ, சவுதி அரேபியா, ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக துபாயில் உள்ள வங்கிகள் மற்றும் பொருளாதார மண்டலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டி வங்கியின் கிளைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் துபாயின் கிரீக் ஹார்பர் பகுதியில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலால் அந்தக் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதை அறிந்த குடியிருப்பாளர்கள் அலறியடித்து வெளியேறினர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அனைத்து குடியிருப்பாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் வளைகுடா நாடுகள் மீது ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை கண்டித்து உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்தை இந்தியா உட்பட 135 நாடுகள் ஆதரித்தன. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சீனா மற்றும் ரஷ்யா இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
இதுகுறித்து பஹ்ரைனின் ஐநா தூதர் ஜமால் அல்ரோவாய் கூறியதாவது:
இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து எதிர்க்கிறது.
உலகப் பொருளாதாரம், எரிசக்தி விநியோகம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியமான வளைகுடா பகுதியில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.
