வடகிழக்கு மாநிலங்களில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: 18 பேர் கைது
புதுடெல்லி: அசாம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில் ‘ஆப்பரேஷன் டிரைடென்ட்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு முறியடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் 18 பேர் கைது செய்யப்பட்டதுடன், ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 500 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.17.82 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2029-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து முழுமையாக விடுவிப்பதே இலக்கு எனத் தெரிவித்திருந்தார்.
38 இடங்களில் அதிரடி சோதனை
இதன் தொடர்ச்சியாக, கடந்த 23-ஆம் தேதி அசாம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் மத்திய புலனாய்வு அமைப்புகளும் மாநில போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும் இணைந்து ‘ஆப்பரேஷன் டிரைடென்ட்’ நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மூன்று மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் 38 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம், வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் செயல்பாடுகள் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனையின்போது கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 18 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 500 டெட்டனேட்டர்கள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.100 கோடி ஹவாலா பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.17.82 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும், சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சட்டவிரோத ஹவாலா பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதுடன், 1,424 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா பாராட்டு
இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு மீண்டும் ஒரு வலுவான அடியைக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் சர்வதேச கடத்தல் வலையமைப்பு முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதில் மத்திய அரசின் உறுதியான நோக்கத்தை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் மூன்று மாநில காவல் துறையினரையும் அமித் ஷா பாராட்டியுள்ளார். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் செயல்பாடுகளை ஒழிக்கும் வரை மத்திய அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
