10 ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 13,000 மடங்கு அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்
புவனேஸ்வர்: ஒடிசாவில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வளர்ச்சி குறித்து பேசினார்.
யுபிஐ பரிவர்த்தனையில் அபரிமிதமான வளர்ச்சி
நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், 2016-17-ஆம் ஆண்டிலிருந்து யுபிஐ (UPI) பணப்பரிவர்த்தனைகளின் அளவு சுமார் 13,000 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது மாதந்தோறும் 2,400 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளும், நாள்தோறும் கிட்டத்தட்ட 80 கோடி பரிவர்த்தனைகளும் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், உலகின் மிகப்பெரிய நிகழ்நேர டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பாக யுபிஐ உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், டிஜிட்டல் நிதிச் சேவைகள் வாயிலாகப் பயனர்களுக்குக் கடன், காப்பீடு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
டிஜிட்டல் உள்கட்டமைப்பில் தரவு மையங்களின் பங்கு
தரவு மையங்கள் டிஜிட்டல் யுகத்தின் பாதுகாப்புப் பெட்டகங்களைப் போன்றவை என்று குறிப்பிட்ட நிதியமைச்சர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2022-ஆம் ஆண்டில் தரவு மையங்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கியதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்தியாவில் உள்ள தரவு மையங்களிலிருந்து உலகளாவிய கிளவுட் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆர்பிஐ சேவைகளை வலுப்படுத்தும் புதிய தரவு மையம்
பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பின் முக்கிய அங்கங்களாக விளங்கும் அமைப்புகளுக்கான இந்தியாவின் உள்நாட்டுத் திறனை ரிசர்வ் வங்கியின் புதிய தரவு மையம் மேலும் வலுப்படுத்தும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்த மையத்தின் மூலம், ரிசர்வ் வங்கியின் முக்கியப் பணப்பரிவர்த்தனைச் சேவைகளான ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் நெப்ட் (NEFT) ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
