போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: அமித்ஷா தகவல்
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் டிரைடென்ட்’ நடவடிக்கையில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அசாம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 38 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கும்பலைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ரூ.100 கோடி மதிப்பிலான ஹவாலா பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதாகவும், 1,424 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதனுடன், ரூ.17.82 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 500 டெட்டனேட்டர்கள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
2029 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவைப் போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் உறுதியை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துவதாக அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய விசாரணை அமைப்புகள், மூன்று மாநிலங்களின் காவல்துறையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
