லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களை கண்டித்து, அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ஈரான் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் புதிய தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் அரசு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவுடன் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தையை ஈரான் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்ற நம்பிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். அடுத்த வாரத்திற்குள் முக்கிய முன்னேற்றம் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லெபனானில் நீடித்து வரும் பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியிட்ட அறிக்கையில், பெய்ரூட் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்த வேண்டாம் என நெதன்யாகுவிடம் வலியுறுத்தியதாக கூறினார்.
மேலும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்தார். அதன் மூலம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா தரப்புகள் ஒருவர்மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.
இந்த புரிந்துணர்வு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை என்றாலும், நிலையான அமைதி ஏற்படும் என நம்புவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். லெபனான், இஸ்ரேல் மற்றும் ஈரான் தொடர்பான இந்த புதிய முன்னேற்றங்கள் மத்திய கிழக்கு அரசியல் சூழலை தொடர்ந்து பரபரப்பாக வைத்துள்ளன.
