கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் மற்றும் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற இந்த போராட்டங்களில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூரில் பேரணியாக வந்த விவசாயிகள், கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து கைது செய்ய முயன்றதால், விவசாய சங்க தலைவர் பழனியப்பன் உள்ளிட்டோருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு முட்டி போட்டு நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூரில் கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகள் பட்டை நாமம் தரித்தும், வாயில் கருப்பு துணி கட்டியும் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற போராட்டம் கவனத்தை ஈர்த்தது. கலெக்டர் அலுவலகம் வாயிலில் மாலை அணிந்து சடலம்போல் படுத்துக்கொண்டு, வாயில் வாய்க்கரிசி போட்டும், ஒப்பாரி வைத்தும், மேளம் அடித்தும் விவசாயிகள் நூதன முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
விழுப்புரத்தில் நகராட்சி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தியும், பட்டை நாமம் அணிந்தும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டங்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.
