ராகுல் பொதுக்கூட்டத்தால் டெல்லி வியாபாரிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி இழப்பு: வர்த்தகர்கள் குற்றச்சாட்டு
புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லியில் இண்டி கூட்டணி நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தால் தீபாவளி பண்டிகைக் கால வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக டெல்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதனால் ஒரே நாளில் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகப் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதையடுத்து, அவர் பதவி விலகக் கோரி காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, டெல்லி ராம் லீலா மைதானத்தில் இண்டி கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் இருந்து ராம் லீலா மைதானம் வரை கூட்டணித் தலைவர்கள் திறந்தவெளி வாகனத்தில் பேரணியாகச் சென்றனர். இதில் ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
இந்தப் பொதுக்கூட்டம் காரணமாக ராம் லீலா மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி வியாபாரம் தீவிரமடையும் நேரத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று டெல்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பு முன்கூட்டியே எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும், பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது.
ரூ.11 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு
இதுகுறித்து டெல்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது:
இண்டி கூட்டணியின் பொதுக்கூட்டம் காரணமாக ராம் லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் கடைகள் மூடப்பட்டன. மேலும், 25 முக்கிய சந்தைகளும் செயல்படவில்லை.
ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் டெல்லிக்கு சரக்குகள் வாங்க வரும் சுமார் 4 லட்சம் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், முகவர்கள் ஆகியோர் போக்குவரத்து பாதிப்பு மற்றும் கடைகள் மூடப்படும் என்ற அச்சத்தால் வரவில்லை.
மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் 5,000க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களும் இயங்க முடியாமல் பாதிக்கப்பட்டன. இதனால் சரக்குகளை ஏற்றுவது மற்றும் இறக்குவதும் தடைபட்டது.
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் டெல்லியின் அனைத்து முக்கிய சந்தைகளிலும் தினமும் ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். ஆனால், இந்தப் பொதுக்கூட்டத்தால் கடைகள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டதால் ஒரே நாளில் சுமார் ரூ.11,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் கடைகள் திறந்திருந்தாலும், போக்குவரத்து மாற்றம் மற்றும் நெரிசல் காரணமாக வாடிக்கையாளர்கள் வரவில்லை. இதனால் வியாபாரம் வெறிச்சோடியது.
வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ள ரூ.11,000 கோடி இழப்புக்கு யார் பொறுப்பேற்பார்கள்? பொதுக்கூட்டத்தை ஒத்திவைக்கக் கோரியும், அதை ஏற்காமல் ராகுல் காந்தி பிடிவாதமாக நடத்தி முடித்துள்ளார்.
இவ்வாறு பிரிஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ராகுலுக்கு நான்கு முறை கடிதம்
தீபாவளி காலத்தில் பொதுக்கூட்டம் நடத்தினால் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால், டெல்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பில் ராகுல் காந்திக்கு நான்கு முறை கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தக் கடிதங்களில், நவம்பர் 10ஆம் தேதிக்குப் பிறகு பொதுக்கூட்டத்தை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வர்த்தகர்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கிடையில், பொதுக்கூட்டத்திற்கு வருபவர்கள் உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி காணொலி வெளியிட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.
பிரியங்கா புறக்கணிக்கப்பட்டதாக பாஜக குற்றச்சாட்டு
இதற்கிடையே, பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்திக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில், ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியை ராகுல் காந்தி பேச அனுமதிக்கவில்லை என்றார்.
கட்சியின் மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சியிலும் பிரியங்கா புறக்கணிக்கப்பட்டதாகவும், பொதுக்கூட்டத்தில் அவருக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தியை மீண்டும் முன்னிலைப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், பிரியங்காவுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் பிரதீப் பண்டாரி விமர்சித்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
