சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிராக, தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தால், தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையில், மேகதாது அணை திட்டத்திற்கான பூமி பூஜை நடத்த கர்நாடக அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், டில்லி பயணத்தின் போது தமிழக முதல்வர் Vijay, இந்த விவகாரத்தில் உள்ள சட்ட வாய்ப்புகள் குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனைக்குப் பிறகு, மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சட்டவிரோதமானது என அறிவித்து திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும், அணைக்கான பூமி பூஜை உள்ளிட்ட எந்தவித முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும், மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
