புதுடில்லி: மாநிலங்களுக்கு இடையே நீடித்து வரும் நதிநீர் பங்கீட்டு பிரச்னைகளுக்கு சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரதமர் Narendra Modi வலியுறுத்தியுள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் 51வது ‘பிரகதி’ ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் ரயில்வே, மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் துறைகளின் கீழ், சுமார் ரூ.30,000 கோடி மதிப்பிலான ஏழு முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டு பிரச்னைகளுக்கு பரஸ்பர ஒத்துழைப்பு, விரைவான ஒப்புதல்கள், தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் திறமையான செயல்பாடுகள் மூலம் தீர்வு காண முடியும் என்று தெரிவித்தார்.
மேலும், Ken-Betwa River Linking Project திட்டம், மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார்.
கென்-பெத்வா திட்டத்தின் மாதிரியில், பிற மாநிலங்களும் நதிநீர் இணைப்பு, நீர் சேமிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் திறன் வாய்ந்த நீர்ப்பாசன முறைகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
நீண்டகால நீர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலங்கள் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், மக்கள் நலத் திட்டங்களில் ஏற்படும் தாமதங்கள் திட்டச் செலவுகளை அதிகரிப்பதோடு, பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய சேவைகளும் தாமதமாகும் என சுட்டிக்காட்டினார்.
எனவே, மத்திய அமைச்சகங்களும் மாநில அரசுகளும் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு விரைவாக ஒப்புதல் அளித்து, முக்கிய திட்டங்களை காலதாமதமின்றி நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
