தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பு தொடர்பாக ஏற்பட்ட தாமதம் குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “பதவியேற்பு விழாவில் ஏற்பட்ட தாமதத்தைப் பார்க்கும்போது, நிலைமை இந்த அளவுக்கு சென்றிருக்கக் கூடாது. இதற்காக மூன்று முதல் நான்கு நாட்கள் ஆனதுடன், ஆளுநர் மாளிகைக்கு பலமுறை செல்ல வேண்டியிருந்தது” என்றார்.
மேலும், “இறுதியில் பெரும்பான்மை எண்ணிக்கை நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை என்பது சட்டப்பேரவையில்தான் நிரூபிக்கப்பட வேண்டும்; ஆளுநர் மாளிகையில் அல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், “எது எப்படியிருந்தாலும், தாமதமாக நடந்திருந்தாலும் இது நல்ல முடிவுதான்” என்று ஒமர் அப்துல்லா குறிப்பிட்டார்.
விஜய்க்கு பெரும்பான்மையை நிரூபிக்க சில நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், “அவர் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
தமிழ்நாடு முதல்வராக விஜய் நேற்று பதவியேற்ற நிலையில், பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
