தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல்முறையாக எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜய் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பதவியேற்ற பிறகு, முதல்வர் விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து தெரிவித்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் விஜய்யும் எழுந்து நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “நான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அதன்படியே பேரவையில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன்” என்று கூறினார்.
மேலும், “முதலமைச்சராக பதவியேற்றுள்ள தம்பி விஜய்க்கு கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
“நேற்றுதான் அவர் பதவியேற்றுள்ளார். கட்டாயம் அவருக்கான நேரத்தை நாம் வழங்க வேண்டும். அதைத்தான் அண்ணன் ஸ்டாலினும் கூறியிருக்கிறார்” என்றும் பிரேமலதா தெரிவித்தார்.
அதன்பிறகு மக்கள் பிரச்னைகள் மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுவோம் என்றும், தமிழக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.
மேலும், “வரும் நாள்களில் என்னென்ன மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பதைப் பொறுத்தே அடுத்தடுத்த செயல்பாடுகள் இருக்கும்” என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
