புதுடில்லியில், மேற்காசியாவில் நடைபெற்று வரும் போரின் தாக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சூழ்நிலையை முன்னிட்டு, பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் தற்போதைய நிலைமை, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவை செயலர், பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். விவசாயம், ரசாயனம், உணவு பாதுகாப்பு, பெட்ரோலியம், எரிசக்தி, ஏற்றுமதி, சிறு மற்றும் குறு தொழில்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி போன்ற துறைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேற்காசிய மோதலால் உலகளாவிய பொருளாதாரத்தில் குறுகிய மற்றும் நீண்டகால பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், இந்தியாவை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில், மின்நிலையங்களில் போதுமான நிலக்கரி கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மின்சார பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரசாயனம், மருந்து மற்றும் தொழில்துறைகளுக்கான தேவைகளை பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் புதிய இலக்குகளும் நிர்ணயிக்கப்பட உள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது அல்லது பதுக்கப்படுவது தவிர்க்க மாநில அரசுகளுடன் இணைந்து கண்காணிப்பு வலுப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்
