பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு; ஸ்விகி, ஸொமேட்டோ ஊழியர்கள் வேலைநிறுத்தம்
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து Swiggy மற்றும் Zomato நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் இன்று (மே 16) பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
நாடு முழுவதும் 4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, டீசல் லிட்டருக்கு ரூ.3.11 மற்றும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.14 உயர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு தங்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என ஸ்விகி, ஸொமேட்டோ உள்ளிட்ட தளங்களில் பணிபுரியும் தற்காலிக டெலிவரி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து Gig and Platform Service Workers Union (GIPSWU) வெளியிட்டுள்ள அறிக்கையில், “விலைவாசி உயர்வு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக தொழிலாளர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ற சலுகைகள் வழங்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஸ்விகி மற்றும் ஸொமேட்டோ நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சேவைகளை நிறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத்தினர் கூறுகையில், “இருசக்கர வாகனங்களை நம்பி வாழும் சுமார் 1.2 கோடி தற்காலிக தொழிலாளர்கள் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் எரிபொருள் செலவை தாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது” என்று தெரிவித்தனர்.
மேலும், “வருமானம் குறைவதால் பல தொழிலாளர்கள் இந்தத் துறையை விட்டு வெளியேறும் அபாயமும் உள்ளது. குறிப்பாக பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் வெயில், மழை மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் தினமும் 10 முதல் 14 மணி நேரம் வரை அவர்கள் டெலிவரி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
