ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் நைஜீரியாவில் சுட்டுக்கொலை; டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: Islamic State பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக கருதப்பட்ட அபு பிலால் அல் மினுகி, Nigeria நாட்டில் அமெரிக்க மற்றும் நைஜீரிய படைகள் இணைந்து நடத்திய நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டிரம்ப் முன்பே குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்த தாக்குதல்களை கட்டுப்படுத்தாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், நைஜீரிய ஆயுதப்படைகளுடன் இணைந்து அமெரிக்க படைகள் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்த அபு பிலால் அல் மினுகி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது வழிகாட்டுதலின்படி, துணிச்சலான அமெரிக்கப் படைகளும் நைஜீரிய ஆயுதப்படைகளும் இணைந்து உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதிகளில் ஒருவரை துல்லியமான நடவடிக்கையின் மூலம் ஒழித்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அபு பிலால் அல் மினுகி ஆப்பிரிக்காவில் ஒளிந்து கொண்டு செயல்படலாம் என்று நினைத்தான். ஆனால் அவனது நகர்வுகளை எங்கள் உளவுத்துறைகள் தொடர்ந்து கண்காணித்து வந்தன. தற்போது அவன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டான்” என்றும் தெரிவித்துள்ளார்.
“அவன் கொல்லப்பட்டதன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் ஒத்துழைத்த நைஜீரிய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
