பாட்னா: பீஹார் மாநிலத்தின் முதல்வராக பாஜவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி இன்று பதவியேற்றார். இதன் மூலம் பீஹாரில் முதல் முறையாக பாஜ ஒரு முதல்வர் பதவியை கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகித்த நிலையில், சமீபத்தில் ராஜ்யசபா எம்.பியாக பொறுப்பேற்றார். இதையடுத்து, மாநில ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைனை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் பின்னர், பாஜவைச் சேர்ந்தவரும் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி, சட்டசபை கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன் அடிப்படையில் அவர் பீஹாரின் புதிய முதல்வராக பதவியேற்றார்.
மேலும், ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி துணை முதல்வராக பதவியேற்றார்.
சாம்ராட் சவுத்ரி குறித்து பார்க்கும்போது, அவர் முன்பு நிதிஷ் குமார் ஆட்சியில் துணை முதல்வராக பணியாற்றியவர். குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்த அவர், முதலில் லாலு பிரசாத் யாதவின் கட்சியில் இருந்த பின்னர், ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். பின்னர் 2017ஆம் ஆண்டு பாஜவில் இணைந்து, 2023ஆம் ஆண்டு மாநில தலைவராக பொறுப்பேற்றார்.
இதுகுறித்து நிதிஷ் குமார், புதிய அரசுக்கு தனது முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
