நாசிக்: மகாராஷ்டிராவில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் நாசிக் பிபிஓ அலுவலகத்தில் பணியாற்றிய பல பெண் ஊழியர்களை மதம் மாற கட்டாயப்படுத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டில், பெண் போலீஸ் அதிகாரிகளின் ரகசிய ஆபரேஷன் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி மாதத்தில், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த இளம் பெண் ஒருவர், தன்னை இஸ்லாமிய பழக்கவழக்கங்களை பின்பற்ற கட்டாயப்படுத்தப்படுவதாகவும், மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து நாசிக் போலீசார் ரகசிய திட்டம் தீட்டி, சுமார் ஒரு மாத காலம் பெண் போலீஸ் அதிகாரிகளை ஹவுஸ்கீப்பிங் ஊழியர்களாக அனுப்பி மறைமுக கண்காணிப்பு மேற்கொண்டனர். இந்த கண்காணிப்பின் மூலம் ஆரம்ப நிலை குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டன.
மார்ச் மாதத்தில் டியோலாலி போலீஸ் நிலையத்தில் முதல் FIR பதிவு செய்யப்பட்டது. ஒரு பெண் ஊழியர், தன் சக ஊழியர் தானிஷ் ஷேக் திருமணத்தை மறைத்து உறவு வைத்ததாகவும், பின்னர் மத மாற்றத்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கின் அடிப்படையில் தானிஷ் ஷேக் மற்றும் தௌசிப் அத்தார் கைது செய்யப்பட்டனர். தௌசிப் அத்தாரின் மொபைலில் இருந்த தகவல்கள் மேலும் பல புகார்களுக்கு வழிவகுத்தன. இதன் மூலம் விசாரணை விரிவடைந்து, மார்ச் 26 முதல் ஏப்ரல் 3 வரை மொத்தம் 9 FIRகள் பதிவு செய்யப்பட்டன.
பெரும்பாலான புகார்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்களிடமிருந்து வந்துள்ளன. பல்வேறு வழக்குகளில், மத உணர்வுகளை புண்படுத்துதல், பாலியல் தொல்லை, அநாகரிகமான நடத்தை, தவறான உறவு வாக்குறுதி, உடல் மற்றும் மன துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சில வழக்குகளில், ஹிந்து தெய்வங்களை இழிவாக பேசியது, பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அவமதித்தது, முறையற்ற தொடுதல், ஆபாச பேச்சு, தொடர்ந்து கண்காணித்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 ஆண்கள் மற்றும் ஒரு பெண் HR அதிகாரி அடங்குவர். அந்த HR அதிகாரி, நிறுவனத்தில் வந்த புகார்களை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிதா கான் என்ற ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
இந்தச் சம்பவத்தால் நாசிக் பிபிஓ அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளியே அரசியல் கட்சிகள் போராட்டமும் நடத்தி வருகின்றன.
கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிற பெண்களும் முன்வந்து புகார் அளிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
