பிற மதத்தினர் கோயிலுக்குள் நுழைவது தொடர்பான வழக்கு முடித்து வைப்பு
மதுரை: பிற மதத்தினர் கோயில்களுக்குள் நுழைவது தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருவதாகவும், அவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
மதுரையைச் சேர்ந்த தங்கம் வெங்கடேஷ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பிற மதத்தினர் தங்களது மத அடையாளங்களுடன் அரசியல் நோக்கத்திற்காகக் கோயில்களுக்கு வந்து வழிபடுவதாகவும், அங்குள்ள கடவுள் மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறி பெயரளவில் கையெழுத்திட்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கோயில்களில் நுழைவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகளை மீறியவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும், நடைமுறையில் உள்ள விதிகளைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார். பிற மத அடையாளங்களை அணிந்திருப்பவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மதத்தைப் பின்பற்றாதவர்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி. முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கிஷோர் ஆஜரானார்.
விசாரணையின்போது, திருவண்ணாமலை கோயிலில் ஒருவர் குல்லா அணிந்து மத அடையாளத்துடன் சென்ற சம்பவத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்ட அவர்கள், முதல்வர் விஜய் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று முறைப்படி கையெழுத்திட்டு, குங்குமம் அணிந்திருந்ததை ஏற்புடையதாகக் குறிப்பிட்டனர்.
அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், அவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
அரசு தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
