புதுடெல்லி: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத மற்றும் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், செல்போன்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கும்பல் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷஜாத் பாட்டி மற்றும் அவரது உதவியாளர் அஜ்மல் குஜார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
பஞ்சாப் வழியாக சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்தி டெல்லியில் விநியோகித்ததாகவும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள், 41 தோட்டாக்கள், மொபைல் போன்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை விரைவில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி கும்பலில் இணைத்ததுடன், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலிலும் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், டெல்லி மற்றும் காசியாபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தும் நோக்கில் முன்கூட்டியே உளவு பார்த்து, முக்கிய இடங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
