பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.7,000 ஆக உயர்வு: ஈரான் எல்லை மூடலால் தட்டுப்பாடு
இஸ்லாமாபாத்:
ஈரான் எல்லை மூடப்பட்டதால், பாகிஸ்தானில் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 12 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.4,500-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான்–ஈரான் இடையிலான காப்ட்–ரிம்தான் மற்றும் டஃப்தான் எல்லைச் சோதனைச் சாவடிகள் கடந்த 17-ஆம் தேதி மூடப்பட்டன. இதற்கான காரணம் குறித்து இரு நாடுகளும் வெவ்வேறு விளக்கங்களை அளித்துள்ளன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண அரசு, பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் கடத்தலைத் தடுப்பதற்கும் எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக எல்லை மூடப்பட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
எல்பிஜி விநியோகத்தில் பாதிப்பு
ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்கு நாள்தோறும் சுமார் 7,000 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லை மூடப்பட்டதால் இந்த விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து குவாதர் வர்த்தக மற்றும் தொழில் துறைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஷம்சுல் ஹக் கூறுகையில், காப்ட்–ரிம்தான் எல்லைச் சோதனைச் சாவடி வழியாக மட்டுமே நாள்தோறும் 4,000 டன்னுக்கும் அதிகமான எல்பிஜி பாகிஸ்தானுக்குள் கொண்டுவரப்படுவதாகத் தெரிவித்தார். தற்போது இந்த இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால், 12 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.4,500-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்ந்துள்ளது. விநியோகத் தடைகள் தொடர்ந்து நீடித்தால் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் ஷம்சுல் ஹக் எச்சரித்துள்ளார்.
எல்லை மூடப்பட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் எல்லையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி
இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி டெஹ்ரானுக்குச் சென்று, ஈரான் தலைவர்களுடன் எல்லைப் பிரச்சினைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் எல்லை வழி வர்த்தகம் மீண்டும் தொடங்குமா என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது.
