விமான எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைத்த தமிழக அரசு
– நமது சிறப்பு நிருபர் –
தமிழகத்தில் விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரி (வாட்) குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் விமான எரிபொருள் மீதான வரி 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், கோவை, மதுரை உள்ளிட்ட பிற விமான நிலையங்களில் 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் விமான எரிபொருள் மீதான வாட் வரி இதுவரை 29 சதவீதமாக இருந்தது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வரி அதிகமாக இருப்பதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன. விமான நிறுவனங்களின் மொத்தச் செயல்பாட்டுச் செலவில் எரிபொருளுக்கான செலவு 50 சதவீதம் வரை இருப்பதால், அதிக வரி விமானப் போக்குவரத்துச் செலவுகளை உயர்த்துவதாகக் கூறப்பட்டது.
இதனால் விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரிப்பதுடன், தமிழக நகரங்களுக்கு புதிய விமானச் சேவைகளைத் தொடங்குவதிலும் நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது. விமான எரிபொருள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என விமான நிறுவனங்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
இதையடுத்து, விமான எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைத்து தமிழக அரசின் வணிக வரித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
புதிய வரி விகிதங்கள்
- சென்னை விமான நிலையம்: விமான எரிபொருள் மீதான வாட் வரி 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- கோவை, மதுரை உள்ளிட்ட பிற விமான நிலையங்கள்: விமான எரிபொருள் மீதான வரி 29 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- 40,000 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள சிறிய விமானங்கள்: சென்னை தவிர, தமிழகத்தின் பிற விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கான வரி 5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வரிக் குறைப்பு 2026 நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்து, 2027 அக்டோபர் 31 வரை நடைமுறையில் இருக்கும். எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் விமான நிறுவனங்களிடமிருந்து விமானப் பயணம் தொடர்பான விவரங்கள் அடங்கிய அறிவிப்புப் படிவத்தைப் பெற்று, மாதாந்திர வரி அறிக்கையுடன் மதிப்பீட்டு அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கையால் விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகள் குறைந்து, புதிய வழித்தடங்களைத் தொடங்குவதற்கும் விமானச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படலாம். மேலும், விமான டிக்கெட் கட்டணங்கள் குறைவதற்கும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்: அமைச்சர் கீர்த்தனா
இந்த வரிக் குறைப்பு குறித்து அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் விமானப் போக்குவரத்துத் துறையில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருள் மீதான வாட் வரி 16 சதவீதமாகவும், தமிழகத்தின் பிற விமான நிலையங்களில் 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டிருப்பது விமானப் பயணத்தை எளிதாக்கவும், பிராந்திய விமான நிலையங்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
செயல்பாட்டுச் செலவுகள் குறைவதால், விமான நிறுவனங்கள் புதிய வழித்தடங்களை உருவாக்கவும், விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சென்னைக்கு அப்பால் உள்ள நகரங்களிலும் சேவைகளை விரிவுபடுத்தவும் ஊக்கம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
இதன் மூலம் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து மேம்படுவதுடன், சுற்றுலா மற்றும் வர்த்தகமும் வளர்ச்சி பெறும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள வணிகங்களுக்கும் பயணிகளுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வலுவான விமானப் போக்குவரத்துச் சூழலை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
