நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) துணைத் தலைவராக அசோக் குமார் லஹிரி இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக இந்தப் பொறுப்பில் இருந்த சுமன் பெர்ரிக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அசோக் குமார் லஹிரி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவாக உள்ளதுடன், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், 15-வது நிதிக் குழுவின் உறுப்பினராகவும் அவர் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இதுதொடர்பாக நீதி ஆயோக் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், அசோக் குமார் லஹிரியின் அனுபவம் அமைப்பிற்கு மேலும் வலுசேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை, பொது நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவருக்கு உள்ள விரிவான அனுபவம், ஆதாரபூர்வமான கொள்கை உருவாக்கம் மற்றும் பொருளாதார மாற்றத்தை நோக்கிய நீதி ஆயோக்கின் பணிகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும், பல்வேறு துறைகள் சார்ந்த உத்திசார் கொள்கை முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதிலும் அசோக் லஹிரியின் பங்களிப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் என நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.
