தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைத்தாலும் ஆதரவில்லை: பாஜக அறிவிப்பு
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைப்பதற்கான அரசியல் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் அதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பிற கட்சிகளின் ஆதரவை பெற முயற்சித்து வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம், மூன்றாவது இடத்தை பிடித்துள்ள அதிமுகவும் திமுகவின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியமைப்பில் எந்த வகையிலும் பங்கேற்கப் போவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதே நோக்கத்துடன்தான் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டோம். இருப்பினும் தேர்தல் முடிவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பையோ அதிகாரத்தையோ மக்கள் பாஜகவுக்கு இந்த தேர்தலில் வழங்கவில்லை என்று கருதுகிறோம். மக்களின் தீர்ப்பையும் தேர்தல் முடிவுகளையும் முழுமையாக மதிக்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, “தமிழகத்தில் புதிய அரசு அமைக்கும் எந்த முயற்சியிலும் பாஜக தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தக் கட்சிக்கும் நாங்கள் ஆதரவாக வாக்களிக்க மாட்டோம்” என்றும் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
