புதுடெல்லி: நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், கல்வி மாபியாக்களை ஒழிக்க மத்திய அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதையும், வினாத்தாள் கசிந்தது உண்மை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான அனைத்து வழக்குகளும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், “நீட் தேர்வின் நேர்மையை பாதித்த கல்வி மாபியாக்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க உறுதிபூண்டுள்ளது. வினாத்தாள் கசிவு நடந்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன். தேசிய தேர்வுகள் முகமை (NTA) இந்த விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கல்வி மாபியாக்களை ஒழிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது” என்றார்.
சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருப்பதாகவும், அவற்றை சரிசெய்ய இந்திய தொழில்நுட்பக் கழக (IIT) நிபுணர்களின் உதவி பெறப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிபிஎஸ்இக்கு நிபுணர்கள் குழு உதவி செய்து வருவதாக கூறிய அவர், 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்கனவே தங்களது விடைத்தாள் நகல்களை பெற்றுள்ளதாகவும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி நாட்டை அவமதிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டினார்.
