புதுடெல்லி: தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஐந்து நைஜீரியர்கள் மற்றும் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் ஆறு வெளிநாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வசந்த் குஞ்ச் வடக்கு காவல்துறையினர் மேற்கொண்ட வழக்கமான ஆய்வின்போது, சந்தேகத்தின் பேரில் ஆறு வெளிநாட்டினரிடம் அவர்களது பயண மற்றும் தங்கும் அனுமதி ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, தங்களது ஆவணங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக சம்பந்தப்பட்ட தூதரகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் தூதரக அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருந்த ஆறு பேரும் தங்களது விசா காலம் முடிந்த பின்னரும் டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த கமாசோகோ ஐச்சா சில்லா மற்றும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பிராமிஸ் ஒக்வாஜே, மரியான் நவான்சே, ஓமோடோலா இஷோலா சைடீக், இம்மானுவேல் சிபுய்கே முவோ, நஸுபெசுக்வு கென்னத் அகிகாவோனி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) மூலமாக, கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
