நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளால் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில், டில்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், மூன்று போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் தனி விமானம் மூலம் மதியம் டில்லி விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக தனது இல்லத்திற்குச் செல்ல வேண்டியிருந்த நிலையில், அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று கொண்டிருப்பதை அறிந்த அவர், தனது பயணம் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என விமான நிலைய வரவேற்பு அறையிலேயே காத்திருந்தார்.
நீட் தேர்வு தொடங்கியதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய பிறகே அவர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.
