ஜம்மு: ஜம்முவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை நோக்கி துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தந்தையான பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ளார். அவர் காஷ்மீரின் முன்னாள் முதல்வராகவும் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
நேற்று இரவு ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள கட்சி பிரமுகர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற திருமண விழாவில் பரூக் அப்துல்லா மற்றும் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒருவர் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.
இந்த தாக்குதலில் பரூக் அப்துல்லா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருடன் இருந்த காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி லேசான காயமடைந்தார்.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் அருகில் இருந்த வாகனத்தில் ஒளிந்துகொண்டிருந்தார். பின்னர் போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அப்பகுதியைச் சேர்ந்த கமல்சிங் ஜம்வால் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த நபர் மது போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் மரண செய்தி காஷ்மீர் பள்ளத்தாக்கில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷியா முஸ்லிம்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த சூழ்நிலையில் பரூக் அப்துல்லா பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
