புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மான நோட்டீசில் ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
மத்திய அரசில் ஆளும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் செயல்படுகிறார் என ‘இண்டி’ கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தகுதியுள்ள பல வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மான நோட்டீசில் ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த நோட்டீசை லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு சபைகளிலும் தாக்கல் செய்ய அந்த கூட்டணி முடிவு செய்துள்ளது.
லோக்சபாவில் ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரும் தீர்மான நோட்டீசில் 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். ராஜ்யசபாவில் 60 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த நோட்டீஸ்களை விரைவில் இரு சபைகளிலும் அளிக்க ‘இண்டி’ கூட்டணி திட்டமிட்டுள்ளது.
இந்திய வரலாற்றிலேயே தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக பதவி நீக்க நோட்டீஸ் அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஆனால் இரு சபைகளிலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க நோட்டீஸ் தோற்கடிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
