திருச்சி: தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க. சேர்வது குறித்து எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை அறிவித்து வருகிறார். அதே நேரத்தில் தி.மு.க. ஆட்சியின் குறைகளையும் எடுத்துக்கூறி வருகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க. வருவது குறித்து எந்தவிதமான பேச்சும் நடைபெறவில்லை. இது குறித்து வெளியில் மட்டும் செய்திகள் பரவி வருகின்றன. எனக்கு தெரியாமல் யாரும் யாரிடமும் பேச மாட்டார்கள்.
டில்லிக்கும் தமிழகத்துக்கும் இடையிலான தேர்தல் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் தற்போது நடைபெற இருப்பது தமிழக சட்டசபை தேர்தல் தான்.
அப்படியிருக்கும்போது டில்லியை எதற்காக இதில் இணைக்கிறார் என்பது புரியவில்லை. அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவரிடம் முதல்வர் பதவி இருக்கிறது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மீது யாரும் குறை சொல்ல முடியாது. அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது. ஆளும் கட்சியாக இருந்தபோதும் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்.
எங்களை எதிர்த்து நேரடியாக அரசியல் மோதல் நடத்த முடியாததால் ஸ்டாலின் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார்.
அ.தி.மு.க. தொண்டர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அந்த நிலை அவர்களுக்கே உள்ளது.
சமீப காலமாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க. இடையே வார்த்தைப் போர் நடந்தது. சுமார் 20 நாட்களாக இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்தன.
இப்போது தி.மு.க. காங்கிரசுடன் பேசி கூட்டணியை முடிவு செய்துள்ளது. இதில் தி.மு.க. எவ்வளவு அவமானம் அடைந்துள்ளது என்பதை உலகமே பார்த்துள்ளது.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை குறித்து செய்திகள் பெரிதாக வெளிவருவதில்லை என்று பழனிசாமி தெரிவித்தார்.
