மேற்கு வங்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி நீக்கப்பட்டதாக அதிருப்தி குழு அறிவித்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்த நிலையில், மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தனிக் குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.
முன்னதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரதா பானர்ஜி தலைமையில் செயல்பட்டு வரும் இந்த அதிருப்தி அணியில் சுமார் 60 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அணியின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், திரிணமுல் காங்கிரசுக்கான புதிய தேசிய செயற்குழு அமைக்கப்பட்டதாகவும், கட்சித் தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
புதிய தலைவராக ஹவுரா மத்திய தொகுதி எம்.எல்.ஏ. அரூப் ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக பிர்ஹாத் ஹக்கீம், அரூப் பிஸ்வாஸ், ரத்தின் கோஷ் மற்றும் சபினா யாஸ்மின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுச்செயலர்களாக ரிதபிரதா பானர்ஜி, ஜாவேத் கான், சந்தீபன் சாஹா ஆகியோரும், பொருளாளராக அன்சாரி பொறுப்பேற்றுள்ளதாக அதிருப்தி குழு தெரிவித்துள்ளது.
