திமுக முன்னாள் அமைச்சர் மகேஷுக்கு 3 நாள் போலீஸ் காவல்: நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தனியார் பள்ளிகளிடம் ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் மகேஷை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஊழல் தடுப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மகேஷ், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதுதொடர்பான விசாரணைக்காக அக்டோபர் 30-ம் தேதி மகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மகேஷ் தரப்பு வாதம்
நீதிமன்றத்தில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் பல்வேறு வாதங்களை முன்வைத்தார். கடந்த மாதம் 18-ம் தேதி போலீசார் நடத்திய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், அன்றைய தினம் மட்டும் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
புழல் சிறையில் முறையான உணவு வழங்கப்படவில்லை என்றும், அங்கு வழங்கப்படும் சப்பாத்தியைச் சாப்பிட முடியாததால் உடல் எடை 4 கிலோ குறைந்துள்ளதாகவும் மகேஷ் தரப்பு கூறியது.
மேலும், வீட்டு உணவு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், சிறையில் தூங்கும்போதுகூட விளக்குகள் எரியவிடப்படுவதாகவும், மருந்துகள் முறையாக வழங்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.
தான் தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை என்றும், போலீசார் நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்தியமூர்த்தி, மகேஷுக்கு உரிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை போலீசார் செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். விசாரணையின்போது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
விசாரணைக் காலத்தில் மகேஷை அவரது வழக்கறிஞர் தினமும் சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
நவம்பர் 2-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு
போலீஸ் காவல் முடிவடைந்ததும் நவம்பர் 2-ம் தேதி மதியம் 12 மணிக்கு மகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
போலீசார் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், நீதிமன்றம் 3 நாட்கள் மட்டுமே போலீஸ் காவல் வழங்கியுள்ளது.
