பிரதமர் மோடி நிச்சயம் ஒருநாள் பசும்பொன் வருவார்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
ராமநாதபுரம்: கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் நிச்சயம் பசும்பொன் வருகை தருவார் எனத் தெரிவித்தார்.
தேசியத் தலைவராகத் திகழ்ந்த முத்துராமலிங்கத் தேவர்
செய்தியாளர்களிடம் பேசிய துணை ஜனாதிபதி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுதந்திரப் போராட்டக் காலத்தில் மட்டுமின்றி, சமூக நலனுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் எனப் புகழாரம் சூட்டினார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நன்மதிப்பைப் பெற்றிருந்த அவர், நேதாஜியைத் தலைவராக ஏற்றுக்கொண்டு இந்திய தேசத்தின் எழுச்சிக்கும், தெய்வீக எழுச்சிக்கும் தமிழக மண்ணில் தொடர்ந்து பாடுபட்டவர் என்றும் குறிப்பிட்டார்.
அரசியல் சமரசங்களைச் செய்திருந்தால் முத்துராமலிங்கத் தேவர் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருப்பார் என்றும், ஆனால் அவர் தனது கொள்கைகளில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளவில்லை என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தவர்
முத்துராமலிங்கத் தேவர் நேர்மை, கண்ணியம் மற்றும் கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தவர் என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்றும் துணை ஜனாதிபதி கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நுழையும் போராட்டத்தை முன்னின்று நடத்துவேன் எனக் கூறி அதில் வெற்றி பெற்றதையும் அவர் நினைவுகூர்ந்தார். தனது சொத்தில் பெரும் பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி பசும்பொன் வருகை தருவார்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மகத்தான தேசியத் தலைவர் எனக் குறிப்பிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், அவரது பிறந்த நாளும் நினைவு நாளும் ஒரே நாளில் அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் நிச்சயமாக பசும்பொன் வருகை தருவதாகக் கூறியுள்ளார் என்றும் துணை ஜனாதிபதி தெரிவித்தார்.
