தாம்பரம்: பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ அதிகாரி Major Mukund Varadarajan அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு அவரது பெயரை சூட்ட தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜன், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்தார். அவரது தியாகத்தைப் பாராட்டி இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதான ‘அசோக் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது.
மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரத்தில் வசித்து வருகிறது. அவரது நினைவை நிலைநிறுத்தும் நோக்கில், கிழக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு அவரது பெயரை சூட்ட நகராட்சி நிர்வாக இயக்குநர் சார்பில் 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி பரிந்துரை அனுப்பப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023-ன் பிரிவு 186-ன் கீழ் சாலையின் பெயரை மாற்றுவதற்கான அனுமதி கோரி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலருக்கு 2025 செப்டம்பர் 19ஆம் தேதி மாநகராட்சி சார்பில் கோரிக்கை அனுப்பப்பட்டது.
பின்னர், தீர்மானத்தை நிறைவேற்றி அறிக்கை அனுப்புமாறு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் அலுவலகத்திலிருந்து 2025 அக்டோபர் 23ஆம் தேதி கடிதம் பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு ‘மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை’ என பெயரிடும் தீர்மானம் நேற்று நடைபெற்ற தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
