திருநெல்வேலி: ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், கிறிஸ்துவ மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடக்கன்குளத்தைச் சேர்ந்த செல்வராஜ் (58) கிறிஸ்துவ மத போதகராக இருந்து வந்தார். அவர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்திய ஜெபக்கூட்டத்தில், தனது பெற்றோருடன் கலந்து கொண்ட 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து வள்ளியூர் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து செல்வராஜுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
