தமிழ்த்தாய் வாழ்த்து இனி மூன்றாவதாக ஒலிக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்படும் நடைமுறை இனி தொடராது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு நூற்றாண்டை கடந்த வரலாற்றுப் பெருமை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் இந்தப் பாடல் பரவ வேண்டும் என்ற நோக்கத்தின் தொடர்ச்சியாகவே தமிழக அரசு அதனை மாநிலப் பாடலாக அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவதும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் வழக்கமான நடைமுறையாக இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைமையிலான புதிய அரசுக்கும் இந்த நடைமுறையில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தலைமையில் நடைபெற்ற முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் முதலில் “வந்தே மாதரம்”, பின்னர் தேசிய கீதம் மற்றும் அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய நடைமுறை தமிழகத்தின் மரபுக்கும் உணர்வுக்கும் பொருந்தாதது என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்படுவதில் தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் தரப்பில் வலியுறுத்தப்பட்டபோது, மத்திய அரசின் புதிய சுற்றறிக்கையின் அடிப்படையில் செயல்பட வேண்டிய கட்டாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அந்த தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் இனி வரும் அரசு நிகழ்ச்சிகளில் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படாது என்றும், முன்பிருந்தபடி நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்துள்ளார்.
