ஹார்முஸ் ஜலசந்திக்கு ‘டிராகன்’ போர் கப்பலை அனுப்பும் பிரிட்டன்
ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில், பிரிட்டன் தனது ‘எச்.எம்.எஸ். டிராகன்’ டிஸ்ட்ராயர் போர்க் கப்பலை மேற்காசியாவுக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசிய நாடான ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கின. இந்த மோதல் தீவிரமடைந்ததையடுத்து, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது.
இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து, ஈரானின் தலையீடு இல்லாமல் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஈரான், தங்களது எல்லைப் பகுதிகளில் அன்னிய நாட்டுப் போர்க் கப்பல்கள் நடமாடினால் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், சீன எண்ணெய் கப்பல் மற்றும் இந்திய மாலுமிகள் பயணித்த சிறிய ரக கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. சீன கப்பலில் இருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும், கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிராந்திய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது.
இந்த சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை பாதுகாக்கும் நோக்கில் மேற்காசியாவுக்கு போர்க் கப்பலை அனுப்ப உள்ளதாக பிரிட்டன் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை பாதுகாக்க உதவும் சர்வதேச பணிக்காக எச்.எம்.எஸ். டிராகன் டிஸ்ட்ராயர் போர்க் கப்பல் மேற்காசியாவுக்கு அனுப்பப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இணைந்து வழிநடத்தும் பன்னாட்டு கூட்டணியின் ஒரு பகுதியாக, சூழ்நிலை அனுமதிக்கும் போது ஜலசந்தி பாதுகாப்பு பணிகளில் பிரிட்டன் தயாராக இருப்பதையும் இது உறுதி செய்யும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
