ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீடித்து வரும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மேலும், அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை மூன்றாவது நாட்டில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை சோவியத் யூனியன் தோற்கடித்ததன் நினைவாக ரஷ்யாவில் ஆண்டுதோறும் “வெற்றி தினம்” கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் அதிபர் புடின் பங்கேற்றார்.
அப்போது உக்ரைன் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்ய வீரர்களை பாராட்டிய அவர், தற்போதைய உலக அரசியல் சூழ்நிலை குறித்தும் கருத்து தெரிவித்தார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், உக்ரைனின் பல நகரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. அதேசமயம் ரஷ்யாவும் பொருளாதார ரீதியாக பாதிப்பை சந்தித்துள்ளது.
இதுகுறித்து பேசிய புடின், “மேற்கத்திய நாடுகளில் அதிகாரத்தில் இருக்கும் சில நபர்கள்தான் இந்த போருக்கு காரணம்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “1989ஆம் ஆண்டு பெர்லின் சுவர் இடிந்த பிறகு நேட்டோ அமைப்பு கிழக்கு நோக்கி விரிவடையாது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் பின்னர் உக்ரைனை ஐரோப்பிய யூனியனுக்குள் இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது இந்த மோதல் முடிவுக்கு வரும் சூழல் உருவாகி வருவதாக கூறிய புடின், “இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு, மூன்றாவது நாட்டில் ஜெலன்ஸ்கியை சந்திப்பது சாத்தியமே” என்றார்.
அதேநேரத்தில், “அந்த சந்திப்பு வெறும் பேச்சுவார்த்தைக்காக இருக்கக் கூடாது. அது இறுதி அமைதி ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் சந்திப்பாக இருக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஐரோப்பிய நாடுகளுடன் பாதுகாப்பு தொடர்பாக பேச வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஜெரார்ட் ஸ்கோடருடன் மட்டுமே பேச விரும்புகிறேன் என்றும் புடின் தெரிவித்தார்.
