ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் செயல்படுத்தப்பட்ட ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.960 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷியை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
காங்கிரசை சேர்ந்த அசோக் கெலாட் முதல்வராக இருந்த காலத்தில், மகேஷ் ஜோஷி பொது சுகாதார பொறியியல் துறை அமைச்சராக பணியாற்றினார். அவரது துறை கட்டுப்பாட்டில்தான் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் ஒப்பந்தங்களை வழங்க லஞ்சம் பெற்றதாகவும், பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, 2024ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் மகேஷ் ஜோஷி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், ரூ.960 கோடி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த ஆண்டு அவரை கைது செய்தது. சுமார் ஏழு மாதங்கள் சிறையில் இருந்த பிறகு, மகேஷ் ஜோஷிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை மாநிலம் முழுவதும் 15 இடங்களில் சோதனை நடத்தியது. அதில் 10 பொறியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், பொது சுகாதார பொறியியல் துறையின் கூடுதல் தலைமை செயலர் சுபோத் அகர்வாலும் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்த மகேஷ் ஜோஷியை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
