கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜ மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜ 207 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் முன்னிலை பெற்றது. 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில், பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அவரது நேர்முக உதவியாளரான 42 வயதுடைய சந்திரநாத் ராத், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மத்தியகிராம் பகுதியில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து துப்பாக்கியால் தாக்கியதாக கூறப்படுகிறது. தலை, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த தாக்குதலில் அவரது ஓட்டுநரும் பலத்த காயமடைந்துள்ளார். சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் சென்ற குற்றவாளிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கூலிப்படை தொடர்பு சந்தேகம்
இது குறித்து போலீசார் கூறுகையில், “அரசியல் பகை காரணமாக திட்டமிட்டு இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம். காரின் கண்ணாடியில் காணப்பட்ட குண்டு துளைகள், அருகிலிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டதை உறுதி செய்கின்றன” என்றனர்.
மேலும், இந்த சம்பவத்தில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
