சென்னை: சோழர் காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேடுகள் சோழர்களின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வரப்பட உள்ளன. இதுதொடர்பான விழாவில் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் இணைந்து பங்கேற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்த செப்பேடுகள் 21 பெரிய மற்றும் மூன்று சிறிய தகடுகளைக் கொண்ட தொகுப்பாகும். இதில் பெரும்பாலான எழுத்துகள் உலகின் மிகவும் அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.
“இந்த செப்பேடுகள், முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜ சோழனால் வழங்கப்பட்ட வாக்குறுதியை முறையாக ஆவணப்படுத்தியதை வெளிப்படுத்துகின்றன. அவை சோழர்களின் பெருமையை பறைசாற்றுகின்றன” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்தியர்களாகிய நாம் சோழர்களின் கலாசாரம் மற்றும் கடற்படை திறமையை நினைத்து பெருமைப்படுகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செப்பேடுகளை பாதுகாத்து வந்த நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
