புதுடில்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-ல் இருந்து 38 ஆக உயர்த்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியாவின் உயரிய நீதித்துறை அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து மொத்தம் 34 நீதிபதிகள் உள்ளனர்.
வழக்குகள் தேங்கி கிடப்பதை குறைத்து, விசாரணைகளை விரைவாக நடத்துவதற்காக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதற்காக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த அவசர சட்டத்திற்கு தற்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த சட்டத்தின் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 31-ல் இருந்து 34 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.
