சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ கீர்த்தனா அமைச்சர் ஆனார்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டசபை தொகுதியில் முதல் பெண் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கீர்த்தனாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிவகாசி தொகுதியில் இதுவரை அதிமுக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், திமுக, மதிமுக, சுதந்திரா கட்சி மற்றும் ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த தொகுதியில் 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கே.டி. ராஜேந்திர பாலாஜி அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர் 2021 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், 2026 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோரை தோற்கடித்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கீர்த்தனா வெற்றி பெற்றார்.
இதன் மூலம் சிவகாசி தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏ என்ற பெருமையை பெற்ற அவர், தற்போது அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முதல்வர் விஜயுடன் இணைந்து அவர் பதவியேற்றார்.
29 வயதான கீர்த்தனாவின் தந்தை சம்பத் விவசாயியாக உள்ளார். தாய் விஜயலட்சுமி குடும்பத் தலைவியாக உள்ளார். அவரது சகோதரி தரணி திருமணமாகி தேனி மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. புள்ளியியல் படித்துள்ள கீர்த்தனா, தேர்தல் வியூக ஆலோசனை நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.
2021ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் அரசியல் ஆலோசகராக திமுகவுக்காக பணியாற்றியுள்ளார். மேலும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மற்றும் கோவா மாநில தேர்தல் பிரசாரங்களிலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சரளமாக பேசக்கூடிய கீர்த்தனா, 2021ஆம் ஆண்டு விருதுநகருக்கு பல் மருத்துவக் கல்லூரி வராததை எதிர்த்து “செங்கல்” ஏந்தி போராட்டம் நடத்தியதன் மூலம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றிருந்தார்.
