தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் மாநிலத்தை புதிய பாதைக்கு கொண்டு செல்லும் என காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 60 ஆண்டுகளாக இருந்த திராவிட கட்சிகளின் ஆட்சியை மக்கள் உடைத்தெறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கடலூர் காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலை குறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், “தமிழகத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றத்தால் மாநிலம் இனி பொலிவுமிக்க பாதையில் பயணிக்கும்” என்றார்.
மேலும், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டபோது முதலில் ஆதரவு தெரிவித்தவர் ராகுல் காந்தி” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் கனிமவளக் கொள்ளை மற்றும் ஊழல் அதிகமாக இருந்ததாக குற்றம்சாட்டிய அவர், “இனி யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்” என்றார்.
தொடர்ந்து பேசிய விஷ்ணுபிரசாத், “கடந்த அறுபது ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்கள் அடக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்த ஆட்சியை மக்கள் உடைத்தெறிந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தின் நிதிநிலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். “தமிழகத்திற்கு தற்போது 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்” என்றார்.
காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டதாக கூறப்படுவது குறித்து பதிலளித்த அவர், “இதுவரை மாறி மாறி ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக, மூன்றாவது நபர் ஒருவர் வந்ததும் இணைந்து செயல்பட முயற்சிக்கின்றன. எனவே மக்களின் முதுகில் குத்தியது அவர்கள்தான்” என்று விமர்சித்தார்.
மேலும், “காங்கிரஸ் கட்சி மக்கள் நலனை கருத்தில் கொண்டே தனது அரசியல் முடிவுகளை எடுத்துள்ளது” என்றும் விஷ்ணுபிரசாத் தெரிவித்துள்ளார்.
