சிக்கனமாக நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம்; அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு
புதுடில்லி: வெளிநாட்டு பயணத்தை முடித்து டில்லி திரும்பிய உடனேயே பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை கூட்டத்தை நடத்தியது அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்று வந்த பிறகு, பிரதமர் மோடி நேரடியாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. “ஐந்து நாட்கள் வெளிநாட்டு பயணம் முடிந்து வந்துள்ள நிலையில் ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் உடனே அமைச்சரவை கூட்டம் நடத்தினார்” என்று சில மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றது. இதில் அனைத்து மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஈரான் போர் காரணமாக உலக நாடுகளில் உருவாகியுள்ள பொருளாதார மற்றும் எரிசக்தி சிக்கல்கள் குறித்து பிரதமர் மோடி விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக அமைச்சரவை கூட்டங்களில் டீ, காபி, பிஸ்கட், சாண்ட்விச், பகோடா உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்படும். ஆனால் இந்த கூட்டத்தில் ஆரம்பத்தில் டீ மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதால் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து சில மூத்த அதிகாரிகள், “டீ, பிஸ்கட் வழங்குவதால் பெரிய செலவு ஆகப்போவதில்லை” என்று கருத்து தெரிவித்ததாகவும், அதன் பின்னர் பிஸ்கட் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இரவு 9.30 மணி வரை கூட்டம் நீடித்ததால், இரவு உணவு வழங்கப்படும் என பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கூட்டத்தின் போது மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதாகவும் கூறப்படுகிறது.
“இந்த இரண்டு மாநிலங்களுக்கும் மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
