மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறின.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ஹார்திக் பாண்டியா 34 ரன்களும், வில் ஜாக்ஸ் 33 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் நண்ட்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா மற்றும் யஷ் ராஜ் புஞ்சா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வரும் மே 27ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
