சவுதி அரேபியாவில் தாக்குதல் காட்சிகளைப் படம் எடுக்க வேண்டாம்: இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை
ரியாத்: சவுதி அரேபியாவில் நிலவி வரும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்பான காட்சிகளைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரியாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மெக்காவை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளையும் சவுதி அரேபியப் பாதுகாப்புப் படைகள் இடைமறித்துத் தடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. அவசர உதவிக்காகத் தொடர்புகொள்ள வேண்டிய எண்களையும் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியர்களுக்கான புதிய எச்சரிக்கையையும் தூதரகம் வெளியிட்டுள்ளது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இடைமறிக்கப்படும் காட்சிகள், அவை விழுந்து சேதம் ஏற்பட்ட பகுதிகள் உள்ளிட்டவற்றைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய காட்சிகளைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்வது சவுதி அரேபியச் சட்டப்படி குற்றமாகும் என அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை விடுத்துள்ள எச்சரிக்கையைத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. சவுதி அரேபியாவின் சட்டதிட்டங்களை மீறுவோர் சிறைத் தண்டனை உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
