தவெக ஆட்சியை செருப்புடன் ஒப்பிட்ட திண்டுக்கல் லியோனி: பேச்சால் சர்ச்சை
சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். குடும்பத் திருமண நிகழ்ச்சியில், பட்டிமன்றப் பேச்சாளரும் திமுக நிர்வாகியுமான திண்டுக்கல் லியோனி, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைச் செருப்புடன் ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் லியோனி, ராமரின் செருப்பு அயோத்தியை ஆண்டதைப் போல, தற்போது அவிழ்த்து வைக்கப்பட்ட செருப்புதான் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், அறிவுலகத் திறப்பு மற்றும் மெட்ரோ ரயில் பயணம் உள்ளிட்ட திட்டங்களால் மக்கள் தொடர்ந்து பயனடைந்து வருவதாகவும், அந்தத் திட்டங்கள் மூலம் மக்கள் திமுக ஆட்சியை நினைவுகூர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய ஆட்சி 14 ஆண்டுகள் நீடிக்காது என்றும், 14 வாரங்களோ அல்லது 14 மாதங்களோ மட்டுமே நீடிக்கும் என்றும் விமர்சித்தார். இந்த ஆட்சிக்கு முடிவுகட்டி, மீண்டும் உதயசூரியன் உதிக்கச் செய்யும் தலைவரின் முயற்சியால் திருமண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
திண்டுக்கல் லியோனியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
