உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவைத் தொடர்ந்து, கோவில் உபரி நிதியை பயன்படுத்தி திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் திட்டங்களை ஹிந்து சமய அறநிலையத்துறை ரத்து செய்துள்ளது.
அறநிலையத்துறை வெளியிட்ட உத்தரவின்படி, கோவில் உபரி நிதியில் இருந்து திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு முன்பு வழங்கப்பட்ட அரசாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் சட்டமன்ற அறிவிப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளன.
இந்த உத்தரவின் அடிப்படையில், தஞ்சாவூர், தென்காசி, திருச்சி, பழநி, தேனி, திருவள்ளூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோவில்கள் சார்பில் கட்ட திட்டமிடப்பட்ட திருமண மண்டபங்களும், சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்க திட்டமிடப்பட்ட வணிக வளாகங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அறநிலையத்துறை ஆணையர் அளித்த பரிந்துரையை ஏற்று, கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படாத 46 திட்டங்களுக்கான நிர்வாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.115.77 கோடி மதிப்பிலான 29 திருமண மண்டபத் திட்டங்களும், ரூ.130.08 கோடி மதிப்பிலான 17 வணிக வளாகத் திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பிலான இந்த திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிதியை கோவில்களின் பராமரிப்பு மற்றும் பக்தர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் புதிய திட்டங்களுக்கு பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
